16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுவரை வழங்கப்பட்டு வந்த 55 சதவீத அகவிலைப்படி கடந்த ஜூலை 1ம் தேதி முதல் 58 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் 16 லட்சம் பேர் பயனடைவார்கள். இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டு மக்கள் நலனில் அன்பும் அக்கறையும் கொண்டு பல சீரிய முன்னோடி நலத் திட்டங்களை தீட்டி தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
மக்களுக்காக வகுக்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களை தீட்டுவதிலும், அத்திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் களப் பணியாற்றுவதிலும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள். அத்தகைய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு கருத்தில் கொண்டு, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில், 1.7.2025 முதல் மாநில அரசு பணியாளர்களுக்கும் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படிக்கு இணையாக உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இதனால் தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 1.7.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.1,829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு இணையாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியதற்கு தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் அமிர்தகுமார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழக தலைவர் கு.தியாகராஜன், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி பொதுச்செயலாளர் இரா.தாஸ், தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் அருள்சங்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பொதுச்செயலாளர் இரா.அருள்ராஜ் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.மதுரம், அகில இந்திய தலைவர் கே.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘எங்களது சங்க கோரிக்கையை ஏற்று, தமிழக அரசின் நிதி சுமையினையும் கருதாமல் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ள முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் சுமார் 2.40 லட்சம் அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,’ என்று கூறி உள்ளனர்.
* அகவிலைப்படி 58 சதவீதமாக உயர்வு: முதல்வருக்கு நன்றி
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அருணன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை மீண்டும் வழங்க உத்தரவிட்டு முதலில் 6 மாதம் கழித்தும் பின்பு நிதிநிலை ஓரளவு சீரானதும் ஒன்றிய அரசு எப்போதெல்லாம் உயர்த்தி வழங்குகிறதோ அதே தேதியிட்டு உயர்த்தி வழங்குவேன் என அறிவித்து சொன்னதை செய்ய கூடிய முதல்வராக, தொடர்ந்து ஒன்றிய அரசு அகவிலைப்படியை உயர்த்தி வழங்குகிறதோ அதே தேதியிட்டு வழங்கி வருகிறார்.
அதன் ஒருபகுதியாக ஒன்றிய அரசு அறிவித்த 55% விழுக்காடு அகவிலைப்படியை 58% விழுக்காடு உயர்த்தி வழங்கியுள்ளார். அதேபோன்று அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படை ஊதியத்துடன் வழங்குவேன் என அறிவித்து வழங்கி வருகிறார். அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய இந்தியாவின் முதன்மை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* ரூ.540 முதல் ரூ.7,500 வரை கூடுதலாக கிடைக்கும்
தமிழ்நாடு அரசு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி உள்ளதால், அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.540 முதல் அதிகப்பட்சமாக ரூ.7,500 ஆயிரம் வரை கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, 18,000 ரூபாய் அடிப்படை சம்பளம் பெறும் அரசு ஊழியருக்கு சுமார் 540 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.
இதேபோல் ரூ.30,000 அடிப்படை சம்பளம் கொண்ட அரசு ஊழியருக்கு கூடுதலாக 900 ரூபாய் கூடுதலாக கிடைக்கும் என்றும், ரூ.90,000 அடிப்படை சம்பளம் வாங்கும் அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக ரூ.2,700 வரை கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்றும், ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7,500 வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
