கோபால்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே ராமராஜபுரம் மிதிபாறை மேடு பகுதியில் நேற்று மதியம், நின்றிருந்த காருக்குள் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அப்பகுதி மக்கள் அளித்த தகவலையடுத்து சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். இதில் கொலையானவர் திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த முருகன் (56) என்பதும், திண்டுக்கல் மாநகராட்சியில் அரசு ஒப்பந்ததாரராக இருந்து வந்ததும் தெரியவந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரை காணவில்லை என திண்டுக்கல் தாலுகா போலீசில் புகாரளிக்கப்பட்டதும் தெரிய வந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை எஸ்பி பிரதீப் பார்வையிட்டார்.
முதற்கட்ட விசாரணையில், மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலில் முருகன் பொருளாளராக இருந்து வந்துள்ளார். அங்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே மர்ம கும்பல், முருகனை காரில் கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் சந்தேகத்தின்பேரில் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான முருகன் மீது வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.