சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் ஆசனூர் அருகே அரசு பேருந்தை காட்டு யானை வழிமறித்ததால், பயணிகள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதற்கிடையே தாளவாடி மலை பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் வனப்பகுதி சாலை வழியாக சத்தியமங்கலம் நோக்கிச் செல்லும் போது, காட்டு யானைகள் லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை தும்பிக்கையால் பறித்து சாப்பிடுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை சத்தியமங்கலத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிய அரசு பேருந்து கர்நாடக மாநிலம் மைசூர் செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதி சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. ஆசனூர் அருகே கொள்ளேகால் பிரிவு அருகே சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த காட்டு யானை அரசு பேருந்தை திடீரென வழிமறித்ததால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். காட்டு யானை மெதுவாக பேருந்தின் முன் பகுதிக்கு வந்து தனது தும்பிக்கையால் பேருந்தின் மேல் பகுதியில் கரும்புகள் உள்ளனவா என தேடி பார்த்தது. காட்டு யானையைக் கண்டு பேருந்தில் இருந்த பயணிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.
சிறிது நேரம் பேருந்தை வழிமறித்த காட்டு யானை பின்னர் மெதுவாக சாலையோரம் நகர்ந்து சென்றதைத் தொடர்ந்து பேருந்து புறப்பட்டு சென்றது. இதையடுத்து பயணிகள் நிம்மதி அடைந்தனர்.