பாட்னா: பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பிரதமர் மோடியின் பல்வேறு நலத்திட்டப் பணிகள் தொடக்க விழா வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற பீகார் முதல்வரான ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் கைகூப்பிய படி கணினியை திரையையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். நிதிஷ்குமார் பக்கவாட்டில் பார்ப்பதும், தானாகவே சிரிப்பதுமாக இருந்தார்.
இந்த வீடியோ பதிவை முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து தேஜஸ்வி கூறுகையில், ‘‘சில காலமாகவே முதல்வர் நிதிஷ் சரியான மனநிலையில் இல்லை. முன்னாள் முதல்வரான எனது தாயார் ராப்ரி தேவி உட்பட பெண்களைப் பற்றி அவர் மோசமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இப்போது ஒழுங்கற்ற நடத்தைக்கு மற்றொரு உதாரணத்தையும் பார்த்துள்ளோம். நிதிஷ் குமாருக்கு அரசை நடத்தும் திறன் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது’’ என்றார்.