சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளுக்கு மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வருகிற 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2025-26ம் ஆண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20ம் தேதி தொடங்கப்பட்டது. www.tngasa.in என்ற இணையதள பக்கத்தில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வந்தனர்.
இந்நிலையில் ஏற்கனவே அறிவித்ததன்படி நேற்றுடன் (ஜூலை 15) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி விண்ணப்பப் பதிவு வருகிற 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 4ம் தேதி அன்று அவர்களின் தரவரிசைப் பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு, சிறப்பு ஒதுக்கீடு மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 11ம் அன்றும், பின்னர் பொது கலந்தாய்வு ஆகஸ்ட் 13ம் தேதி முதல் தொடங்கி மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. முதலாம் ஆண்டு முதுநிலை மாணாக்கர்களுக்கு வகுப்புகள் ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்க உள்ளது.