அரசு பள்ளிகளின் கல்வித்தரம், கட்டமைப்புகளை தனியாருக்கு இணையாக மேம்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை: அரசு பள்ளிகளின் கல்வித்தரம், கட்டமைப்புகளை தனியாருக்கு இணையாக மேம்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக அரசு ஒவ்வொரு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்று, இரண்டு என மாதிரி பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளாக உருவாக்கியது. இந்த திட்டத்தை கொண்டு தமிழகம் முழுவதும் அரசு மாதிரி பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த கட்டுமானத்தை தனியார் பள்ளிகளுக்கு நிகராகவும், போதிய இருக்கை வசதி மற்றும் அனைத்து வசதிகளை கொண்டும், போதிய ஆசிரியர்கள் மற்றும் அனைத்து கட்டமைப்புகளுடனும் தனியார் பள்ளிக்கு நிகராக உருவாக்கப்பட்டு சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாதிரி பள்ளிகளை உருவாக்கி அந்தப் பள்ளிகளின் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தையும், மதிப்பெண்ணையும் உயர்த்தியது வரவேற்கக்கூடியது. அந்த மாதிரி பள்ளிகள் ஒரு ஒன்றியத்திற்கு ஒன்று, இரண்டு தான் தற்போது வரை உள்ளன. அந்த மாதிரி பள்ளிகளை தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளும் அதே கட்டமைப்புகளுடனும், கல்வி தரத்துடனும், போதிய ஆசிரியர்களுடனும் செயல்பட வேண்டும். அப்படி இருந்தால் தான் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஆர்வம் வரும். அரசு பள்ளிகள் மீதும் மதிப்பு கூடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 
  
  
  
   
