Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு பள்ளியில் பில்லர் அமைக்க பள்ளம் தோண்டியபோது பூமிக்கடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘சிவ லிங்கம்’ கண்டெடுப்பு

*செங்கம் அருகே பரவசம்

செங்கம் : செங்கம் அருகே அரசு பள்ளியில் பில்லர் அமைக்க பள்ளம் தோண்டியபோது பூமிக்கடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘சிவ லிங்கம்’ கண்டெடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பழைய கட்டிடத்தை இடித்து புதிய பள்ளி கட்டிடங்கள் மற்றும் நூலகம், ஆய்வகம் கட்டுவதற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவில் பில்லர் அமைப்பதற்காக பணியாளர்கள் 20 அடி பள்ளம் தோண்டி விட்டு சென்றனர். பின்னர் நேற்று காலை பள்ளம் தோண்டி வெளியேற்றிய மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் அங்குள்ள பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது மிகவும் பழமையான ‘3 அடி கொண்ட சிவலிங்கம்’ மண்ணில் புதைந்து இருந்தது. இதைபார்த்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து மண் இடுபாடுகளிலிருந்து சிவலிங்கத்தை பத்திரமாக மீட்டு எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த தாசில்தார் முருகன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி தேன்மொழி ஆகியோர் பூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கத்தை செங்கம் சிவன் கோயில் உட்புறம் வைத்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பூமிக்கடியில் இருந்து கிடைத்த சிவலிங்கத்தை காண ஏராளாமான பக்தர்கள் அங்கு திரண்டு ‘ஓம் நமச்சிவாய’ என பக்தி முழக்கமிட்டு பூஜை செய்து வழிபட்டனர்.

மீட்கப்பட்ட சிவலிங்கம் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. தொடர்ந்து பள்ளியில் கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில் பில்லர் அமைப்பதற்காக பள்ளம் தோன்றும் நிலையில் ஏதேனும் பழமையான சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா எனவும் தொடர்ந்து கண்காணித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.