Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக ஆக.5ல் தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை

*வேளாண் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்

ஈரோடு : கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு ஆகஸ்ட் 5ம் தேதி தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளிடம் நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஜூலை மாதத்திற்கான வேளாண் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து, கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள குறைகளையும், கோரிக்கைகள் குறித்தும் பேசினர்.

அப்போது, கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்க செயலாளர் நல்லசாமி பேசுகையில்,‘‘பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அணை நிரம்புவதால் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். அணை நிரம்பி பாசனத்துக்கு பயன்படாமல், கடலுக்கு செல்லும் நிலை ஏற்படக்கூடாது. வெறி நாய், தெரு நாய் கடித்து இறந்த ஆடு, பிற கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். பலியான கால்நடைகளுக்கு இழப்பீடு விரைந்து வழங்க வேண்டும்’’ என்றார்.காலிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம் பேசுகையில், ‘‘காலிங்கராயன் வாய்க்காலில் 13.2 கி.மீ முதல் கான்கிரீட் தளம், கரை அமைக்க வேண்டும். நீர் நிலைகளில் இருந்து, 5 கி.மீட்டருக்குள் ஆலைகள் இருக்கக்கூடாது. ஏற்கனவே உள்ள ஆலைகளை விரிவாக்கம் செய்யக்கூடாது என விதிகள் இருந்தும், வாய்க்காலையொட்டி ஏராளமான ஆலைகள் உள்ளன. இதனை தடுக்க வேண்டும்’’ என்றார்.

மேட்டூர் வலது கரை வாய்க்கால் பாசன சபையினர் பேசுகையில், ‘‘உரக்கடைகளில் யூரியா வாங்கினால், இணை உரமாக சில உரங்களை வாங்கினால் தான் யூரியா தருவதாக கூறி, தர மறுக்கின்றனர்’’ என்றனர்.கொடிவேரி அணை-பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி தளபதி பேசுகையில், ‘‘பவானி ஆற்றில் உள்ளாட்சி அமைப்புகளின் திட, திரவ கழிவுகள் கலக்கிறது. இதனால் நீர் நிலைக்குள் ஆகாயத்தாமரை, ஊனாங்கொடி வளர்ந்து, நீர் நிலைகளை நாசமாகிறது. அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண் துறையின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு சொந்தமாக நாதிபாளையம், கணபதிபாளையம் குடோனில், பொது விநியோக திட்ட அரிசி 6 ஆயிரம் டன் வாடகைக்கு இருப்பு வைத்துள்ளதால் விளை பொருட்களை வைக்க முடியவில்லை. அரிசியில் இருந்து வரும் பூச்சி, வண்டு, பதர் ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பரவுகிறது.

கோவை அன்னூர் ஆசனூர் வழியாக 4 வழிச்சாலை அமைக்க திட்டமிட்டு விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றுள்ளனர். இதற்கு சந்தை மதிப்பை கணக்கிட்டு வழங்க வேண்டும். வேளாண், பயிர் கடன் பெற, பிற வங்கிகளில் என்.ஓ.சி வாங்கி வர கூட்டுறவு வங்கிகள் நிர்பந்திக்கிறது. ஒரு வங்கியில் என்ஓசி பெற 200 ரூபாய் கட்டணம் எனில், விவசாயிகள் 2 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டி உள்ளது. இதனை எளிமைப்படுத்த வேண்டும்’’ என்றார்.

பழங்குடி மக்கள் நலச்சங்கம் குணசேகரன் பேசுகையில்,‘‘தாட்கோ மூலம் பர்கூர் மலையில் உள்ள பழங்குடியினருக்கு ஆட்டு பண்ணை அமைக்க கடனுடன் மானியம் என 70 ஆயிரம் ரூபாய் வீதம் வங்கிகளுக்கு பரிந்துரைத்தது. தாமரைக்கரை கனரா வங்கி 15 நாளில் கடனை வழங்குவதற்கு பதில் பல மாதமாக இழுத்தடிக்கிறது. கலெக்டர் நடவடிக்கை எடுத்து, நேரில் வந்து வழங்க வேண்டும். பல மனுவை தாட்கோ தள்ளுபடி செய்தது.

அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். மலை கிராமத்தில், 100 நாள் வேலையை முழுமையாக அமலாக்க வேண்டும்’’ என்றார்.தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு பேசுகையில்,‘‘கீழ்பவானி பாசனத்தில் நீண்ட கால பயிர்களான கரும்பு, தென்னை, வாழை போன்றவை நீர் இன்றி வாடுவதால், விரைவில் தண்ணீர் திறக்க வேண்டும்.

மரவள்ளி அறுவடைக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளதால், முன்னதாக ஆலை நிர்வாகம், விவசாயிகள், அதிகாரிகளை அழைத்து குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும். கொடுமுடி, மொடக்குறிச்சி வேளாண் விரிவாக்க மையங்களை விரைவில் கட்ட வேண்டும். கொடுமுடி தாலுகா அலுவலகத்தை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசிமணி பேசுகையில்,‘‘மரபணு மாற்று நெல் ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளதை தடுக்க வேண்டும்’’ என்றார். தொடர்ந்து பல்வேறு பகுதி விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை:

இதில், நீர் வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி பேசுகையில், ‘‘கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். அதற்கான அரசாணை வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி அல்லது 4ம் தேதிக்குள் வரும் என எதிர்பார்க்கிறோம். காலிங்கராயன் வாய்க்காலில் 13.2 கி.மீ முதல் 15.2 கி.மீ வரை கான்கிரீட் தளம், கரை அமைக்க, ரூ.83.32 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும்.

மாசு, கழிவு நீர் கலப்பை தடுப்பதற்கு ரூ.26 லட்சம் ஒதுக்கப்பட்டு, புகாருக்கு உரிய இடத்தில் 6 கண்காணிப்பு கேமரா அமைத்துள்ளோம். கழிவு நீர் கலக்கும் இடங்களை கண்டறிந்து தடுப்பு அமைக்கும் பணி நடக்கிறது’’ என்றார். வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி பேசுகையில், ‘‘மொடக்குறிச்சி, கொடுமுடி வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்துக்கு திட்ட வரைவு அனுப்பி உள்ளோம்.

மாநில கூட்டத்தில் முடிவு செய்து விரைவில் அறிவிப்பு வரும். மரபணு மாற்று நெல் விதை உட்பட எந்த விதையும் வேளாண் துறை மூலம் விற்பதில்லை. தனி நபர்கள் வைத்திருந்தால் ஆய்வு செய்து அறிவிக்கை செய்யப்படாத ரகமாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மலைப்பகுதியில் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்து விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். உரக்கடைகளில் யூரியாவுடன் இணை உரங்களையும் வாங்க கட்டாயப்படுத்த கூடாது. மீறி செயல்படும் கடைகள் மீது உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

10 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ராஜ்குமார் பேசுகையில், ‘‘கடந்த ஒரு மாதத்தில் நீர் நிலைகளில் கழிவு கலந்த புகாரின்பேரில், ஈரோடு பகுதியில் மட்டும் 1 தோல் ஆலை, 3 சாய ஆலை என 10 ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்துள்ளோம்.

நீர் நிலைகளில் இருந்து 5 கி.மீட்டருக்குள் புதிய ஆலைகள் அமைக்க அனுமதிக்கக்கூடாது என விதி உள்ளது. அவ்வாறு அமைக்க அனுமதி தரவில்லை. கழிவு நீர் வெளியேற்றுவதை கண்காணிக்க ஆர்.என்.புதூர், கருங்கல்பாளையம் பகுதியில் ஆன்லைன் கண்டினியூ மானிட்டரிங் மிஷின் பொருத்தி உள்ளோம்’’ என்றார்.

ஆலையை நிரந்தரமாக மூடவும் பரிந்துரை: வேளாண் குறைதீர் கூட்டத்தில் இறுதியாக கலெக்டர் கந்தசாமி பேசியதாவது:நாய் கடியால் இறந்த கால்நடைகளுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்கும் பணி நிறுத்தி வைக்கவில்லை.

கடந்த ஜூன் மாதம் வரை இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு கோரி அனுப்பி உள்ளோம். வந்ததும், இழப்பீடு வழங்கப்படும். வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட குடோனில், பொது விநியோக திட்ட அரிசி அதிகளவில் வந்ததால், அது மழையில் நனைந்துவிடக் கூடாது என்பதால், அனுமதி பெற்று வைத்துள்ளனர். விரைவில் அகற்றப்படும்.

பயிர் கடன் பெற என்ஓசி வாங்க அலைவதை தவிர்க்க ஆன்லைனில் விண்ணப்பித்து பெறவும், வங்கிகள் குறைந்த பட்சம், 200 ரூபாய் என இல்லாமல், குறைந்த தொகை பெற முடியுமா என இந்த வாரம் நடக்க உள்ள வங்கியாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தி தெரிவிக்கிறேன்.

மிகப்பெரிய அளவில் தவறு செய்யும்போது ஆலைகள் மீது சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மற்ற தவறுகளுக்கு ஆலை இயக்கத்தை மின் தடை மூலம் தடுக்கிறோம்.

மீண்டும் அந்த தவறு நடக்காமல் இருக்க பிரச்னை சரி செய்தால் ஆலை இயங்க அனுமதிக்கிறோம். 3 முறைக்கு மேல் தொடர்ந்து தவறு செய்தால், ஆலையை நிரந்தரமாக மூட அனுமதி கோரி அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயமணி, தோட்டக்கலை துணை இயக்குநர் குருசரஸ்வதி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.