அரசு சொத்துகளை சேதப்படுத்தினால் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை!
டெல்லி: அரசு சொத்துகளை சேதப்படுத்தினால் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றம் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து மக்களவையில் விவாதம் நடைபெற்றது.
ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தப்பட்டு வந்தாலும், ஒன்றிய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சுதந்திர தின விடுமுறையை அடுத்து இன்று நாடாளுமன்றம் கூடிய நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கியது.
இதனால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை எச்சரித்த சபாநாயகர் ஓம் பிர்லா, நீங்கள் கோஷமிடும் அதே சக்தியுடன் கேள்விகளைக் கேட்டால், நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கும். மக்கள் உங்களை அரசு சொத்தை சேதப்படுத்த நாடாளுமன்றத்துக்கு அனுப்பவில்லை. மேலும், அரசாங்க சொத்துக்களை அழிக்க எந்த உறுப்பினருக்கும் உரிமை இல்லை என்று நான் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் அரசு சொத்துகளை சேதப்படுத்தினால் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டு மக்கள் உங்களைப் பார்த்து வருகிறார்கள். இதுபோன்ற பொருட்களை சேதப்படுத்திய எம்.எல்.ஏ.க்கள் மீது பல மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள. அரசு சொத்துகளை அழிக்காதீர்கள் என மீண்டும் எச்சரிக்கிறேன்; இது என் வேண்டுகோள் எனவும் ஓம் பிர்லா கூறினார்.