Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு மருத்துவ கல்லூரிகளில் டீன்களை நியமிக்க கோரி வழக்கு: அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மதுரையை சேர்ந்த வெரோனிக்கா மேரி தாக்கல் செய்த மனு: மதுரை அரசு மருத்துவமனை டீன், கடந்த ஏப்.30ம் தேதியுடன் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது மூத்த பேராசிரியர்கள் மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர்களாக பதவி வகித்து வருகின்றனர். இங்கு பல அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

மேலும் இதயம், கண், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட மருத்துவ மையம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வாகனங்கள் நிறுத்த வசதியின்மை, அறுவை சிகிச்சைகளில் தாமதம், அதிக கூட்டம், தரம் குறைந்த மருத்துவம், அவசரகால மருந்துகளை கொள்முதல் செய்வது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண நிரந்தர முதல்வரை (டீன்) பணியமர்த்துவது மிகவும் அவசியம். மதுரையில் மட்டுமின்றி தமிழகத்தில் கரூர், திருச்சி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் டீன்கள் நியமிக்கப்படவில்லை.

எனவே, தமிழகத்தில் மதுரை உள்பட காலியாக உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் இவ்வாறு கூறியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு, டீன்களை நியமனம் செய்ய இயலவில்லை எனில் மருத்துவக்கல்லூரிகளை திறப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர். பின்னர் இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்.3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.