*கண்காணிப்பு அலுவலர் தீபக்ஜேக்கப் ஆய்வு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் தீபக்ஜேக்கப் ஆய்வு நடத்தினார்.
அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்களை ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசுத்துறை உயர் அலுவலர்களை கண்காணிப்பு அலுவலர்களாக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப் தலைமையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் அரசு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது.
அதில், கலெக்டர் தர்ப்பகராஜ், டிஆர்ஓ ராம்பிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, செய்யாறு உதவி கலெக்டர் அம்பிகாஜெயின், மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, உதவி கலெக்டர் (பயிற்சி) அம்ருதா, ஆர்டிஓக்கள் ராஜ்குமார், சிவா, ஊராட்சி உதவி இயக்குநர் வடிவேலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் நடைபெறும் அரசு வளர்ச்சித்திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து துறை வாரியாக கண்காணிப்பு அலுவலர் ஆய்வு நடத்தினார்.
மேலும், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார். இதுவரை நடைபெற்ற முகாம்களில் அதிக எண்ணிக்கையில் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளது என அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, சாலைப் பணிகள், குடிநீர் திட்டங்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள், சமூக நலத்துறை சார்பில் நிறைவேற்றப்படும் திட்டங்கள், ஊரக வளர்ச்சித்துறை திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் நடைபெறும் திட்டங்களை ஆய்வு செய்தார். மேலும், நடப்பு கல்வி ஆண்டில் புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் பயன்பெறும் மாணவர்களின் விபரங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
முன்னதாக, துரிஞ்சாபுரம் ஒன்றியம் சாலையனூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெறும் சாலைப் பணிகளை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, மல்லவாடி கிராமத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களிடம் கலந்துரையாடினார்.
வெள்ள பாதிப்பு பகுதிகளில் தனி கவனம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பருவமழை காலம் தொடங்கும் முன்பு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கண்காணிப்பு அலுவலர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.