சென்னை: உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணாக்கர்கள் சேர்க்கை நடந்து வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு கல்லூரி இல்லாத பகுதிகளில் நடப்பாண்டில் மட்டும் புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் நிரந்தர உதவி பேராசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை, கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த முதல்வர் அறிவுறுத்தினார்.
அதன்படி, கடந்த ஜூலை 21ம் தேதி கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிக பணியமர்த்துதலுக்கான இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தகுதியானவர்களுக்கு கடந்த 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை நேர்காணல் நடந்தது. அதன் முடிவில் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களின் தெரிவு பட்டியல் tngasa.org என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்டவர்கள், தங்களது பயனர் குறியீடு (யூசர் ஐடி) மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) வழியாக தாங்கள் தெரிவு செய்யப்பட்ட கல்லூரி மற்றும் விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும் 8ம்தேதிக்குள் உரிய கல்லூரிகளில் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பணியில் இணைய வேண்டும்.