*வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிர்ச்சி
காரமடை : மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை என தொடர் விடுமுறையை ஒட்டி பல்லாயிரக்கணக்கானோர் ஊட்டியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதனால் கோவை - மேட்டுப்பாளையம் சாலை மற்றும் மேட்டுப்பாளையத்தில் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காரமடை பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்திருந்துள்ளன.
இதற்கிடையே ஊட்டியில் இருந்து பாலக்காடு நோக்கி செல்லும் TN 43 N0985 என்ற தமிழ்நாடு அரசு பேருந்தின் டிரைவர் பேருந்தை காரமடை - தோலம்பாளையம் சந்திப்பில் நெரிசல் காரணமாக மேட்டுப்பாளையம் வாகனங்கள் செல்லும் திசையில் எதிர்ப்புறமாக வாகனத்தை இயக்கியுள்ளார்.
இதனை கண்ட வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாத இதுபோன்ற வாகனங்களின் டிரைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரம் இதுபோன்று எதிர் திசையில் சென்ற தனியார் பேருந்து டிரைவரின் லைசென்ஸ் 7 நாட்களுக்கு தற்காலிக தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.