*படிப்பகம் துவங்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திங்கள்சந்தை : நுள்ளிவிளை ஊராட்சி கண்டன்விளையில் பூட்டியே கிடக்கும் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திங்கள்சந்தை அருகே நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட கண்டன்விளை பஸ் நிறுத்தம் அருகே கடந்த 18.11.1978ம் ஆண்டு அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியை அப்போதைய நிதி அமைச்சர் நாஞ்சில் மனோகரன் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நுள்ளிவிளை ஊராட்சி சார்பில் எஸ்.பி.எம்.ஆர்.எம். திட்டத்தின் கீழ் குடிநீர் தொட்டியின் கீழ்பக்கம் உள்ள காலி இடத்தில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டு இசேவை மையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
பின்னர் பல்வேறு காரணங்களால் இத்திட்டம் கைவிடப்பட்டதால் புதியதாக கட்டப்பட்ட கட்டிடம் தற்போது பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் மக்கள் பணம் விரயமாகியுள்ளது. பொதுமக்கள் இந்த கட்டிடத்தின் முன் பகுதியில் அமர்ந்து பத்திரிகைகள் படித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பயனற்று பூட்டி கிடக்கும் கட்டிடத்தை மக்கள் படிப்பகமாக பயன்படுத்த அனுமதிக்கலாம். இதனால் கட்டிடம் பயன் அளிப்பதோடு மக்கள் பல்வேறு சிரமத்தின் நடுவில் சாலையோரம் அமர்ந்திருப்பதை தவிர்க்க முடியும்.
இல்லையென்றால் ஊராட்சியில் வேறு ஒரு திட்டத்திற்கு என இந்த கட்டிடத்தை பயன்படுத்தலாம். மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டிக்கு கீழ் பகுதியில் கட்டிடம் அமைந்துள்ளதால் மக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக பேசப்படுகிறது.
அது உண்மையெனில் அப்பகுதியில் கட்டிடம் கட்ட அனுமதி அளித்தது யார்? மக்கள் பணம் விரயமான நிலையில் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது? தடை செய்யப்பட்ட பகுதியில் அறை கட்டப்பட்டது என்றால் அதற்கான தொகை குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து பெறப்படுமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.
எனவே பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கும் கட்டிடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர். இதுதொடர்பாக அந்த பகுதி சமூக பொது நல இயக்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.