*கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அவலம்
காரைக்கால் : புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு புதுவை அரசு தடை விதித்தது. அதன்படி பிளாஸ்டிக் பைகள், உறிஞ்சு குழல்கள்,தட்டுகள்,பிளாஸ்டிக் பேப்பர், டீ, குடிநீர் கப்புகள், சுரண்டிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனை வியாபாரிகள் பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதோடு, கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என உள்ளாட்சித் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.தொடர்ந்து 2022ம் ஆண்டு சட்டசபை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
இந்த உத்தரவு வந்த இரண்டு நாட்களுக்கு அதிகாரிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பம்பரமாக சுழன்று 10 கிலோ, 20 கிலோ பிளாஸ்டிக் பிடித்துவிட்டோம். இரண்டு கடைகளுக்கு சீல் வைத்துவிட்டோம் எனக் கூறினார்கள். ஆனால் அதன்பிறகு ஒரு நடவடிக்கையும் இல்லை.
குறிப்பாக காரைக்கால் மாவட்டத்தில் தற்போது முன்பை விட பல மடங்கு பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவிட்டது. குறிப்பாக டிபன் கடைகள்,பாஸ்ட் புட் கடைகள், தின்பண்டம் விற்கும் கடைகளில் பார்சல் கொண்டு செல்ல பிளாஸ்டிக் பைகள் தான் இன்றும் உபயோகப்படுத்தப்படுகிறது.பானி பூரி விற்கும் கடைகளில் பிளாஸ்டிக் கரண்டிகள், தட்டுகள் பயன்பாடு மீண்டும் சகஜமாகி விட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் திரும்பும் இடமெல்லாம் மதுபான கூடங்கள் இருக்கும். அதற்கு பக்கத்திலே சைடிஸ் கடைகள் எக்கச்சக்கமாக முளைத்து விட்டது. இங்கெல்லாம் பிளாஸ்டிக் பைகளில் தான் திண்பண்டங்களை கொடுத்து அனுப்புகின்றனர்.
பொது வெளியில் மது அருந்திவிட்டு பிளாஸ்டிக் பைகளை வீசி விட்டு செல்லும் அவலம் தொடர்கிறது. தற்போது காரைக்கால் நகர பகுதி முழுவதும் சாலையோர கடைகளும் அதிகரித்து விட்டது.நகரப்பகுதியில் மட்டும் திண்பண்ட கடைகளின் எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இந்த கடைகளில் அதிகப்படியாக ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால் நகரப்பகுதியின் பிரதான சாலைகளில் பிளாஸ்டிக் பேப்பர்,பைகள் காற்றில் பறந்து ஆங்காங்கே உள்ள வாய்க்காலில் அடைத்துக் கொள்கிறது.
காரைக்காலில் உள்ளாட்சி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ச்சியாக சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வந்தோம். தற்போது வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு இது குறித்து எச்சரிக்கை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றனர்.
முன்பை விட அதிகம்
காரைக்கால் நகர பகுதியில் துப்புரவு பணி ஊழியர்கள் கூறுகையில், குப்பை வாரும் போது முன்பை விட அதிகப்படியான பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பதை எங்களால் கவனிக்க முடிகிறது. குறிப்பாக பைகள் மற்றும் ஜூஸ் டம்ளர்கள், உறிஞ்சு குழல்கள், டிபன் கடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேப்பர், அலுமினிய பைகள், பிளாஸ்டிக் கரண்டிகள் அதிகமாக கிடைக்கிறது. வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருப்பது தெரிய வருகிறது என்றனர்.