அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 30ம் தேதி வரை நீட்டிப்பு: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
சென்னை: உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை முதலாமாண்டு மாணவ - மாணவிகள் சேர்க்கைகான விண்ணப்பப் பதிவினை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிப்பதற்கு உரிய வழிவகைகள் செய்யப்பட்டு மேற்கண்ட பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இணையதளத்தில் விண்ணப்ப பதிவு மேற்கொள்ள தவறவிட்ட மாணாக்கர்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்குடன் விண்ணப்ப பதிவு இணையதளம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளம் 30.09.2025 வரை தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாணாக்கர்கள் தாங்கள் சேர விரும்பும் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு www.tngasa.in என்ற இணையதளத்தில் 30.09.2025-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னையில் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கோவி. செழியன் நிருபர்களிடம் கூறுகையில்,‘ உயர் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை பரிசீலனையில் உள்ளது. விரைவில் வெளியிடப்படும். மாணவர்கள் நலன் பாதிக்க கூடாது என்பதற்காக தான் பார்த்து பார்த்து செய்யக்கூடிய பொறுப்பு உயர்கல்விக்கு உண்டு. எனவே எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற நிலை இல்லாமல் உயர்கல்வித்துறையின் மாண்பை கட்டிக் காக்கின்ற பொறுப்பை முதலமைச்சர் எங்களுக்கு வலியுறுத்தியுள்ளதால், உரிய நேரத்தில் உரிய முடிவெடுத்து மாணவர்கள் மாணவர்கள் நலன் காக்கப்படும். கால வரையறை இறுதி செய்ய முடியாது முதல்வரிடம் கலந்து பேசித் தெரிவிக்கப்படும்,’என்றார்.