சென்னை: கடவுளே, அஜித்தே என்ற கோஷம் எனக்கு கவலை அளிக்கிறது!’ என்று நடிகர் அஜித் குமார் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர், அஜித் குமார். தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், கார் ரேஸிங்கிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம், வரும் பொங்கலன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில், சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் அவரது பெயரைப் பயன்படுத்தி ‘கடவுளே, அஜித்தே’ என்ற வாசகம் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இதையறிந்த அஜித் குமார், நேற்றிரவு பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சமீபகாலமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க... அஜித்தே’ என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து, எனது பெயருடன் வேறெந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியளவும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
(ஏகே, அஜித், அஜித் குமார்) எனவே, பொது இடங்களிலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் அசவுகரியம் ஏற்படுத்தும் இச்செயலை நிறுத்துவதற்கு உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். எனது இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள். வாழு, வாழவிடு. இவ்வாறு அஜித் குமார் கூறியுள்ளார். அவர் தனது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் விடுத்திருக்கும் இந்த வேண்டுகோள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.