*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கோபி : கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், பின்னலாடை நிறுவனங்கள் சாய தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த உபதொழில்களில் பெரும்பாலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், தேனி, விருதுநகர் போன்ற வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களே அதிகளவில் தங்கி வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், திருப்பூரை சுற்றி உள்ள கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை போன்ற ஈரோடு மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விவசாய தொழில் பெரிய அளவில் கைகொடுக்காததால் தொழிலாளர்கள் வேலை தேடி திருப்பூர் மாவட்டத்திற்கு செல்ல தொடங்கினர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை கோபி, அந்தியூர், பவானி, புதுக்கரைபுதூர், ஒத்தகுதிரை, பங்களாபுதூர், டி.என்.பாளையம், காசிபாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் குறைவான தொழிலாளர்களே வேலைக்காக திருப்பூர் சென்று வந்தனர்.
இந்நிலையில், திருப்பூரில் மட்டுமின்றி அதைச்சுற்றி உள்ள அவினாசி, பெருமாநல்லூர், திருமுருகன் பூண்டி போன்ற பகுதிகளிலும் பின்னலாடை நிறுவனங்கள் வளர தொடங்கியது.
விவசாயமும் கை கொடுக்காத நிலையில் கோபி, அந்தியூர், பவானி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குறைந்த சம்பளத்திற்கு தொழிலாளர்கள் கிடைத்ததால், பின்னலாடை நிறுவனங்களே சொந்த வேன் மற்றும் பேருந்துகள் மூலமாக தொழிலாளர்களை நாள்தோறும் வேலைக்கு அழைத்து சென்றனர். இதனால் கோபி, அந்தியூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாள்தோறும் திருப்பூர் சென்று வருகின்றனர்.
கோபியில் இருந்து கொளப்பலூர், கெட்டி செவியூர், குன்னத்தூர்,பெருமாநல்லூர் வழியாகவே திருப்பூர் செல்ல வேண்டிய நிலையில் நாள்தோறும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1000க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொழிலாளர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
இதுதவிர, கோபியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்செந்தூர், பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள், விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் என அதிகாலை முதல் நள்ளிரவு வரை கோபி, திருப்பூர் சாலை பரபரப்பாகவே இருக்கும். இதுதவிர இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்பவர்களும் ஏராளமாக உள்ளனர்.
இதுதவிர, 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள் காலை, மாலை நேரங்களில் இந்த சாலையில் செல்கின்றன. இதனால், கடந்த சில ஆண்டுகளாக கோபி-திருப்பூர் சாலையில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து விபத்துகளும் அதிகரித்ததோடு, போக்குவரத்து நெரிசல் காரணமாக உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், கடந்த 8 வருடங்களுக்கு முன் ஈரோடு-மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டபோதே, கோபி-செங்கப்பள்ளி நான்கு வழிச்சாலை திட்டமும் கொண்டு வரப்பட்டது. சுமார் 32 கி.மீ தூரத்திற்கு சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோபி-செங்கப்பள்ளி நான்கு வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டால், பயண நேரம் குறைவதோடு, விபத்துகள் தவிர்க்கப்படுவதோடு போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதுடன் செலவுகளும் குறையும் என வாகன ஓட்டுநர்களும், தொழிலாளர்களும் எதிர்பார்த்து இருந்த நிலையில் இந்த திட்டம் தொடக்க நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்த வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் கணிசமாக அதிகரித்து உள்ளது. இதனால், 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட கோபி-செங்கப் பள்ளி நான்கு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வலுத்து வருகிறது.
கோபி-திருப்பூர் சாலையில் கொளப்பலூர், வடுகபாளையம், வேட்டைகாரன் கோயில் உள்ளிட்ட பல இடங்களில் விபத்துகளை தடுக்க பேரிகார்டுகளை காவல்துறையினர் வைத்துள்ளனர். அதிகரித்து வரும் வாகனங்கள் ஒருபுறம், போதிய சாலை வசதி இல்லாதது மற்றும் விபத்துகளை தடுக்க ஆங்காங்கே பேரிகார்டுகள் போன்ற காரணங்களால் கூடுதல் பயண நேரம் அதிகரித்து வருவதும், வாகனங்களின் எரிபொருள் செலவு போன்றவற்றால் தனியார் நிறுவனங்களும் திணருகின்றன.
இந்நிலையில் கோபி அருகே உள்ள மொடச்சூரில் சந்தை எதிரே உள்ள பாலம் குறுகலாக உள்ள நிலையில், ஒவ்வொரு வாரமும் வாரச்சந்தை நாளான சனிக்கிழமை காலை முதல் இரவு வரை அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பாலத்தை அகலப்படுத்தப்பட்டது.
அதே போன்று மொடச்சூரில் இருந்து வேட்டைகாரன் கோயில் வாய்க்கால்மேடு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே போன்று கோபி-செங்கப்பள்ளி நான்கு வழிச்சாலை திட்டமும் கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


