Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அருமனை அருகே பல்பொருள் அங்காடியில் தினசரி ரூ.5 ஆயிரம் மதிப்பு பொருள் திருட்டு: முதியவருடன் சிக்கிய இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விட்டது அம்பலம்

அருமனை: அருமனை அருகே திருட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விட்டு பல்பொருள் அங்காடியில் தினசரி ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை அபேஸ் செய்த இளம்பெண்ணை முதியவருடன் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அருமனை அருகே முதப்பன்கோடு பகுதியில் பெத்தேல் ஸ்டோர் என்ற பெயரில் பல்பொருள் அங்காடி உள்ளது. நேற்று மாலை கடைக்கு வந்த 2 பேர் பல்வேறு பொருட்களை எடுத்துக்கொண்டு பில் போடாமல் வெளியே சென்றனர். இதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த உரிமையாளர் பிரவின், பணியாளர்கள் 2 பேரையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பை, பாக்கெட், உடலின் பல பாகங்களில் மறைத்து வைத்து இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து அருமனை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இன்ஸ் பெக்டர் சாந்தி, எஸ்ஐ சுஜன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். இந்த விசாரணையில் கடை உரிமையாளரிடம் சிக்கியவர்கள் மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியை சேர்ந்த குணசேகரன் உத்தமதாஸ் (66), மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்த பிரியங்கா (35) என்பது தெரியவந்தது. 2 பேரும் மார்த்தாண்டம் ரதிமீனா பார்சல் சர்வீஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருவரும், 7 மாதமாக கடையில் இருந்து பொருட்களை எடுத்து செல்வதும் தெரியவந்தது. பெத்தேல் ஸ்டோரில் இருந்து விலை உயர்ந்த பொருட்களை எடுத்து பையில் போட்டு கொள்வார்களாம். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க விலை குறைந்த சில பொருட்கள், 2 பால் பாக்கெட்டுக்கு மட்டும் பில் போட்டு கொள்வார்களாம். அதன் பிறகு அபேஸ் செய்த பொருளை 8ம் வகுப்பு படிக்கும் தனது மகனை வரவைத்து கைமாற்றி விட்டுவிடுவது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதற்கிடையே திருடிய பொருட்கள் அனைத்தையும் வீட்டில் வைத்திருப்பதாக பிரியங்கா போலீசாரிடம் கூறி உள்ளார். தொடர்ந்து போலீசார் நேற்று இரவு அவர் கட்டி வரும் புதிய வீட்டில் சோதனை செய்தனர். ஆனால் அங்கு பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு செல்போன் சார்ஜர் மட்டும் கிடைத்தது. அதை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து குணசேகரன் உத்தமதாஸ், பிரியங்கா ஆகியோரை போலீசார் இன்று காலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 2 பேரும் சேர்ந்து இதேபோல் வேறு ஏதாவது கடைகளில் கைவரிசை காட்டி இருக்கிறார்களா? 2 பேருக்குமான தொடர்ந்து ஆகியவை குறித்தும் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர்.

திருட்டுக்கு விடுமுறை

பார்சல் சர்வீசில் வேலை பார்க்கும் பிரியங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும். ஆகவே தனது திருட்டுக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விட்டு இருக்கிறார். மற்ற நாட்களில் அதாவது தினசரி சுமார் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடி வந்து இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிக்கியது எப்படி?

பெத்தேல் ஸ்டோர் உரிமையாளர் பிரவின் கடையில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் கவுண்டர் அருகில் தனது செல்போனை நேற்று சார்ஜர் போட்டுள்ளார். பின்னர் செல்போனை எடுத்து சென்று இருக்கிறார். மீண்டும் சார்ஜர் போட வந்தபோது சார்ஜரை காணவில்லை. தொடர்ந்து அந்த பகுதியில் தேடி பார்த்து இருக்கிறார். இருப்பினும் சார்ஜர் கிடைக்கவில்லை. உடனே ஸ்டோரில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்து பார்த்து இருக்கிறார். அப்போது பிரியங்கா சார்ஜரை எடுத்து செல்வது தெரிந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்து பார்த்து உள்ளனர். அதில் குணசேகரன் உத்தமதாஸ், பிரியங்கா ஆகியோர் கூட்டு சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.