Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தில் 17 மணி நேரத்துக்கு பிறகு சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

சென்னை: திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்ட சம்பவத்தை தொடர்ந்து, மின் கம்பங்கள், ரயில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு, சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் 17 மணி நேரத்துக்கு பிறகு நேற்று அதிகாலை முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

சென்னை மணலி ஐஓசியில் இருந்து 50 டேங்கர்களில் டீசல் நிரப்பிக்கொண்டு, ஒரு சரக்கு ரயில் மைசூருக்கு நேற்று முன்தினம் அதிகாலை புறப்பட்டது. அந்த ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்து திருவள்ளூர் மற்றும் ஏகாட்டுர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, ஒரு டேங்கர் தடம் புரண்டது. சில விநாடிகளில் அடுத்தடுத்த சில டேங்கர்களும் கவிழ்ந்தன. இதில், ஒரு டேங்கரில் இருந்த டீசலில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகம் காரணமாகவும், டீசல் என்பதாலும் அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் மளமளவென தீ பரவியது. இதையடுத்து சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

தீயணைப்பு படை வீரர்கள் ரசாயன நுரை, தண்ணீர் பீய்ச்சி தீயை முழுவதுமாக அனைத்தனர்.

இந்த தீ விபத்தில் 17 டேங்கர்கள் முழுதாக நாசமாயின. மீதமிருந்த 32 டேங்கர்கள் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியும் துரிதமாக நடந்தன. முதற்கட்டமாக, மின்சார ரயில்கள் ஒரு தண்டவாளத்தில் சென்று திரும்பும் வகையில், தண்டவாள பராமரிப்பு மற்றும் மின் இணைப்பு பணியை ரயில்வே ஊழியர்கள் செய்தனர். 4 தண்டவாளங்களில் கிடந்த டேங்கர்களை ராட்சத கிரேன் மூலம் அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் கிடக்கும் சரக்கு டேங்கர்கள் அகற்றப்பட்ட பின்பு, தண்டவாளம், மின் கேபிள்கள் சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தண்டவாளம் 3 மற்றும் 4 முழுவதும் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, சுமார் 17 மணி நேரத்திற்கு பின்பு தண்டவாளங்கள் மற்றும் மின் கம்பிகள் சீரமைக்கப்பட்டு, நேற்று அதிகாலை முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம் மார்க்கமாக செல்லும் ரயில்கள் இயக்கம் மீண்டும் தொடங்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட ரயில் பாதையில் சென்னை சென்டரலில் இருந்து திருவனந்தபுரம், மங்களூரு, ஆலப்புழா, பாலக்காடு உள்ளிட்ட விரைவு ரயில்கள் மெதுவான வேகத்தில் இயக்கப்பட்டன.

மேலும், அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மார்க்கத்திலும் தண்டவாளத்தில் கவிழ்ந்து கிடந்த சரக்கு ரயிலின் டேங்கர்களை ராட்சச கிரேன் மூலம் அகற்றும் பணி நடந்து முடிந்து, நேற்று அதிகாலை முதல் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், ரயில்கள் செல்லும் நேரத்தில் சற்று காலதாமதம் ஏற்படும் எனவும், எந்த ரயில்களும் இதுவரை ரத்து செய்யப்படவில்லை எனவும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 26 மணி நேரமாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று மதியம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் இருப்பு பாதையும் சரி செய்யப்பட்டு, ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பத்தால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு விபத்து நடந்ததாக ரயில்வே போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலே காரணம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், நிருபர்களின் சந்திப்பின்போது கூறுகையில், ``திருவள்ளூர் அருகே ஏற்பட்ட விபத்துக்கு ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் எப்பொழுது நடைபெற்றது என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரித்து வருகிறது. இதில் நாச வேலை எதுவும் இல்லை’’ என தெரிவித்தார்.