கோல்ட்ரிப் இருமல் மருந்து கம்பெனியில் 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசின் மருந்து ஆய்வுக்குழு எந்தவித ஆய்வையும் செய்யவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், தேசிய தன்னார்வ ரத்த தான நாள்-2025 விழிப்புணர்வு உறுதிமொழி நேற்று ஏற்கப்பட்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர்கூறியதாவது: கோல்ட்ரிப் இருமல் மருந்து தொடர்பாக, அக்டோபர் 1ம் தேதி நிகழ்வு நடந்தவுடன் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் கோல்ட்ரிப் சிரப் என்ற மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார். அதில் டைஎதிலீன் கிளைகால் அளவு 1% கூட இருக்க கூடாது என்ற நிலையில் 48% அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக மத்திய பிரதேச அரசுக்கு தெரியபடுத்தப்பட்டது. மற்ற மாநிலங்களிலும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கும் இதன் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மருத்துவ சேவை கழகம் இந்த மருந்தை கொள்முதல் செய்வதில்லை, தனியாரும் இந்த மருந்தினால் பாதிக்கப்படக்கூடாது என்று உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்குள் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த நிறுவனம் இனிமேல் இயங்காத வகையில் முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மருந்து உற்பத்தி செய்யும் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளவது கட்டாயமாகும். கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசின் மருந்து ஆய்வு செய்யும் குழுவினர் எந்தவிதமான ஆய்வையும் மேற்கொள்ளவில்லை. இவ்வளவு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்த காரணத்தினால் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட இருந்த உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.
* அரசியலாக்குவது அநாகரிகம்
இது மிகப்பெரிய பிரச்னை். இதனை அரசியல் ஆக்கி பொது விவாதங்களில் அதிகமாக விவாதிப்பது என்பது நாகரிகமாக இருக்காது என்பதை எதிர்க்கட்சி தலைவர் புரிந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.