Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஒரே நாளில் இரண்டு முறை எகிறி பவுனுக்கு ரூ.320 அதிகரிப்பு தினமும் மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை: எட்டாக்கனியாகி வருவதால் விழிபிதுங்கும் ஏழை மக்கள்

சென்னை: தினமும் மின்னல் வேகத்தில் தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் இரண்டு முறை எகிறி பவுனுக்கு ரூ.320 அதிகரித்து பொதுமக்களை விழிபிதுங்க வைத்துள்ளது. தங்கம் வாங்குவது இனி ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர் அறிவிக்கப்பட்ட இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீதான அதிரடி வரி விதிப்பு, உலக நாடுகளுக்கு இடையில் நடைபெற்று வரும் போர் பதற்றம் மற்றும் பல்வேறு நாடுகள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் வரலாறு காணாத உச்சமாக செப்டம்பர் 23ம் தேதி ஒரு பவுன் விலை உச்சமாக ரூ.85 ஆயிரத்தை தொட்டது. தொடர்ந்து புதிய உச்சத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து ஒரே நாளில் இரண்டு முறை அதிகரித்து பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. தங்கம் விலை தினம்தோறும் உச்சம் தொட்டு நகை பிரியர்களை கதிகலங்க வைத்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. ஆனால் கடந்த 10 மாதங்களில் மட்டும் சுமார் ரூ.31 ஆயிரம் அதிகரித்துள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தங்கம் விலை இந்த ஆண்டில் மட்டும் தங்கம் விலை ரூ.33 ஆயிரம் அதிகரித்துள்ளது. கட்டுக்கடங்காமல் ஏறி வரும் தங்கம் விலை எப்போதுதான் குறையும் என நகை பிரியர்கள் கலக்கத்துடன் உள்ளனர். சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்துவருவதே விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,480 உயர்ந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது, லாபகரமானது என கருதி பலரும் தங்கத்தை வாங்கி குவிப்பதும் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.

தங்கத்தின் விலை நேற்று முன்தினம் இரண்டு முறை உயர்ந்தது. பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.91,080 ஆக விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தங்கம் கிராமிற்கு ரூ.185 உயர்ந்தது. பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்துள்ளது. காலையில் ரூ.800ம், மாலையில் ரூ.680ம் உயர்ந்துள்ளது. இப்படி ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்ந்து வருவதை பார்த்த நகை பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த விலை உயர்வு நேற்று காலையும் தொடர்ந்தது. நேற்று காலை தங்கம் விலை மேலும் கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,400க்கும், ஒரு பவுன் ரூ.120 அதிகரித்து ரூ.91,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலையிலும் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி மாலையில் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.91,400 என்ற புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது.

கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.11,425க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு பவுன் தங்கம் விலை ரூ.91,400க்கு விற்றது. மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் விலை உயர்வால், திருமண சீசன், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்கள் வருவதால் தங்கத்தை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் தற்போது பெரும் சோகத்தில் உள்ளனர். இந்த விலை உயர்வு நடுத்தர மக்களை கவலைக்குள்ளாகியுள்ளது. தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் இனி தங்கம் வாங்குவது ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறிவிட்டது.

தங்கம் விலை ஜெட் வேகத்தில் செல்வதால் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.