சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.80 உயர்ந்தது. தங்கம் விலை கடந்த மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் கடந்த 29ம் தேதி முதல் தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தை பதிவு செய்து வந்தது. விலை குறைவு இல்லாத நாளே இல்லை என்ற அளவுக்கு விலை உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 16ம் தேதி ஒரு பவுன் விலை ரூ.82,240 என்ற வரலாற்று புதிய உச்சத்தை தொட்டது. இந்த விலை உயர்வு திருமணம் மற்றும் விசேஷ தினங்களுக்காக நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 17ம் தேதி தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.82,160 ஆகவும், 18ம் தேதி கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.10,220க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.81,760க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு என்பது 2 நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. நேற்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,230க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.81,840க்கும் விற்கப்பட்டது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் நேற்று உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.143க்கும், கிலோவுக்கு ரூ.2000 உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.