Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஜெட் வேகத்தில் தங்கம் விலை அதிகரிப்பு; பவுன் ரூ.83 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்: ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்வு: தசரா, தீபாவளி நேரத்தில் விலை உயர்வால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.83 ஆயிரத்தை தாண்டி வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. நேற்று காலையில் தங்கம் அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,360க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.82,880க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் உயர்ந்திருந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.148க்கும், கிலோவுக்கு ரூ.3000 உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

காலையில் எந்த அளவுக்கு உயர்ந்ததோ, அதே வேகத்தில் மாலையிலும் தங்கம் விலை உயர்ந்தது. மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,430க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.83,440க்கும் விற்பனையானது. இது குறித்து தங்கம் நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘அமெரிக்கா அதிபர் டிரம்ப் விதித்திருக்கும் வரிகளால் உலக அளவில் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த அதிகபட்ச இறக்குமதி வரி விதிப்பு. சர்வதேச பங்கு சந்தைகளின் வீழ்ச்சி, டாலர் மதிப்பு குறைந்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவில் வட்டி விகிதத்தை குறைப்பது குறித்து கடந்த இரு தினங்களாக ஆலோசனை கூட்டம் நடந்தது.

வட்டி விகிதம் குறைப்பால் வங்கிகளில் டெபாசிட் செய்வதை பெரும்பாலானோர் தவிர்த்து தங்கம் உள்ளிட்ட பொருட்களின் மீது அதிக அளவில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதன் தாக்கமும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகும். அது மட்டுமல்லாமல் நேற்று பிற்பகலில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 30 டாலர்கள் அதிகரித்து 3,722.85 டாலராக இருந்தது. இதுவே மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாகும்’’ என்றார்.

நவராத்திரி பண்டிகை தற்போது தொடங்கியுள்ளது. தொடர்ந்து அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வேறு வருகிறது. இப்படி பண்டிகை நாட்கள் தொடர்ச்சியாக வருகிறது. தீபாவளி முடிந்ததுமே திருமண முகூர்த்த காலம் தொடங்கும். வழக்கமாகவே பண்டிகை, சுபமுகூர்த்த காலங்களில் தங்கம் விலை சற்று உயர்வதுண்டு. இந்த ஆண்டு ஏற்கெனவே பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் பண்டிகை காலத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை அதிரடி காட்டியுள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.