Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தங்கத்தகடுகள் கடத்தப்பட்ட விவகாரம்; சபரிமலையில் நீதிபதி ஆய்வு: 10 பேர் மீது குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு

திருவனந்தபுரம்: தங்கத்தகடுகள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சபரிமலையில் நீதிபதி ஆய்வு நடத்தினார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து செம்புத் தகடுகள் என்று கூறி தங்கத் தகடுகள் கடத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துவாரபாலகர் சிலைகளில் இருந்து மட்டும் சுமார் 475 கிராம் தங்கம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே சபரிமலை கோயிலில் உள்ள தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை ஆய்வு செய்ய நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையில் ஒரு குழுவை கேரள உயர்நீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழு நேற்று சபரிமலையில் ஆய்வை தொடங்கியது. நேற்று காலை சபரிமலை சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் ஆய்வு நடத்தப்பட்டது. பதிவேட்டில் உள்ள விவரங்களின்படி பாதுகாப்பு அறையில் பொருட்கள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது.

சர்ச்சைக்குள்ளான சென்னைக்கு பழுது பார்ப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட துவாரபாலகர் சிலைகள், கதவு நிலை ஆகியவற்றில் இன்று ஆய்வு நடத்தப்படுகிறது. இதன்பின் நாளை ஆரன்முளாவில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான பாதுகாப்பு அறையில் ஆய்வு செய்யப்படுகிறது. மொத்தம் 18 பாதுகாப்பு அறைகள் உள்ளன. இந்த அனைத்து அறைகளிலும் ஆய்வு நடத்தி 2 வாரங்களுக்குள் கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி கே.டி. சங்கரன் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே சபரிமலை கோயிலில் தங்க இழப்பு தொடர்பான விசாரணையின் போது விஜிலென்ஸ் பிரிவால் சுட்டிக்காட்டப்பட்ட 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிடிபி தலைவர் பி எஸ் பிரசாந்த் தெரிவித்தார். துணை தேவசம் கமிஷனர் (ஹரிபாத்) பி முராரி பாபு மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெறும் வாரியக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

10 பேர் மீது குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு: சபரிமலையில் தங்கத்தகடுகள் மாயமான சம்பவத்தில் மாநில குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. உண்ணிகிருஷ்ணன் போத்தி, அவரது உதவியாளர்கள் மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.