Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திரையுலகில் பொன் விழா காணும் இளையராஜாவுக்கு வரும் 13ம் தேதி சென்னையில் பாராட்டு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

சென்னை: திரையுலகில் பொன் விழா காணும் இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசின் சார்பில் வருகிற 13ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடக்கிறது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞர் அன்புமிளிர இசைஞானி என அழைத்து போற்றப்பட்ட இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 8,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

1975ம் ஆண்டு துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. திரையிசை மட்டுமின்றி பல்வேறு தனியிசை படைப்புகளையும் வெளியிட்டுள்ளார் இளையராஜா. முழு மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை சிகரத்தையும் தொட்டு சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த முதல் தமிழர் மட்டுமல்ல, இளையராஜா முதல் இந்தியரும் ஆவார். ஆசிய நாடுகளை சேர்ந்த எவரும் இந்த சாதனையை இதுவரை நிகழ்த்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

8.3.2025 அன்று லண்டன் மாநகரில் முதல் நேரடி சிம்பொனி இசைநிகழ்ச்சி நடத்த இருந்த நிலையில், 2.3.2025 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை பாராட்டி, அவருக்கு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதுகுறித்து சமூக வலைதளப்பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிடும்போது, “தம் கைப்பட எழுதிய Valiant Symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் காட்டி மகிழ்ந்தார்.

உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசை மூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்த சாதனை ஒரு மணி மகுடமென திகழ வாழ்த்துகிறேன்!” என்று குறிப்பிட்டார். அதை தொடர்ந்து, லண்டன் மாநகர் சென்று சிம்பொனி சாதனை நிகழ்த்தி வெற்றியுடன் சென்னை திரும்பிய நிலையில் 13.3.2025 அன்று இளையராஜா முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு வந்து நன்றி தெரிவித்தார்.

பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தம்முடைய வலைதளப்பதிவில், “லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்து திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டு காலத் திரையிசை பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, வருகிற 13ம் தேதி (சனிக்கிழமை) அன்று மாலை 5.30 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெற இருக்கிறது.  இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இன்னிசை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை வழங்குகிறார்.

தொடர்ந்து நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையுரை ஆற்றுகிறார். உலகநாயகன் கமல்ஹாசன் எம்.பி., சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்துரை வழங்குகிறார்கள். நிறைவாக இளையராஜா எம்.பி. ஏற்புரை நிகழ்த்துகிறார். விழாவில் அமைச்சர்கள், மேயர், எம்பி, எம்எல்ஏக்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரைக் கலைஞர்கள், திரைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ் திரையுலக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நன்றி கூறுகிறார்.