சாமோகோவ்: பல்கேரியாவில் யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. அதில் பெண்களுக்கான 57 கிலோ எடை பிரிவில் இந்தியா சார்பில் தப்ஸ்யா களமிறங்கினார். இறுதி ஆட்டத்தில் நேற்று நார்வே வீராங்கனை ஃபெலிசிடாஸ் டோமஜீவா உடன் மோதினார். அதில் 5-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப் பெற்ற தப்ஸ்யா தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். ஃபெலிசிடாசா வெள்ளி பெற்றார்.
டோல்ஜோன் ட்சின்குவேவா(கூட்டமைப்பு), அன்னா ஸ்டரடன்(கஜகஸ்தான்) ஆகியோருக்கு வெண்கலம் கிடைத்தது. அதேபோல் 68கிலோ எடை பிரிவில் களமிறங்கிய இந்திய வீராங்கனை ஸ்ருஷ்டி இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை ரே ஹோஷினோ உடன் மோதினார்.
அதில் ரே 7-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று தங்கத்தை கைப்பற்ற, ஸ்ருஷ்டி வெள்ளியை வசப்படுத்தினார். கூடவே 55 கிலோ எடை பிரிவில் ரீனா, 76கிலோ எடை பிரிவில் பிரியா ஆகியோர் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி உள்ளனர். எனவே இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. அது தங்கமா, வெள்ளியா என்பது இன்று தெரியும்.