சென்னை: தங்கம் விலை நேற்று கிடு, கிடுவென பவுனுக்கு ரூ.1760 உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்வோரை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதாவது ஒரு நாள் அதிரடியாக குறைவதும், அதே வேகத்தில் மறுநாள் உயருவதுமாகவும் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் காலை, மாலை என கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.169க்கும், கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி 1 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.220 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,700க்கும், பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு பவுன் ரூ.93,600 ஆயிரத்துக்கும் விற்பனையானது. அதே நேரத்தில் தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.3,200 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று பண்டிகை நாட்கள் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. இதே போல நேற்று வெள்ளி விலையும் உயர்ந்தது. நேற்று காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.170க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
