சென்னை: தங்கம் விலை நேற்று மேலும் உயர்ந்து ஒரு பவுன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதே போல வெள்ளி விலையும் நேற்று உயர்வை கண்டது. தங்கம் விலை இந்த மாதத்தில் இருந்து காலை, மாலை என ஒரு நாளைக்கு 2 தடவை உயர்ந்து வரலாற்று உச்சத்தை பதிவு செய்து வருகிறது. அதுவும் சில நாட்கள் வரலாறு காணாத விலை உயர்வு என்பதும் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிடு, கிடுவென பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்து ஒரு பவுன் ரூ.94,600க்கு விற்பனையானது.
இதே போல நேற்று முன்தினம் வெள்ளி கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.206க்கும், கிலோவுக்கு 9,000 ரூபாய் உயர்ந்து, பார் வெள்ளி. 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இது நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை உயர்வை தான் சந்தித்தது. நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,860க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.94,880க்கும் விற்பனையானது.
இதே போல நேற்று வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.207க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து, பார் வெள்ளி 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இதுகுறித்து தங்கம் நகை வியாபாரிகள் கூறுகையில், ‘தங்கம், வெள்ளியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் இந்த உலோகங்கள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தையும், வெள்ளி கிலோ ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்தையும் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் தணிந்து, அமெரிக்கா நமது நாட்டின் மீது திணித்த வரியை திரும்ப பெற்றாலே தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்பு இருக்கிறது’ என்றனர்.