சென்னை: தங்கம் விலை வாரம் இறுதி நாளான நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.1,520 குறைந்தது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் சரிவை சந்தித்தது. கடந்த 10ம் தேதியில் இருந்து தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர தொடங்கியது. நேற்று முன்தினம் தங்கம் விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. அதுவும் நேற்று முன்தினம் ஒரே நாளில் காலை, மாலை என பவுனுக்கு ரூ.1,280 வரை குறைந்தது.
இதன் மூலம் ஒரு பவுன் ரூ.93,920க்கு விற்பனையானது. இதே போல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.180க்கும், கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் விற்பனையானது. தங்கம், வெள்ளி விலை குறைந்தது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் வாரத்தின் இறுதிநாளான நேற்றும் தங்கம் விலை குறைய தான் செய்தது.
நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.11,550க்கும், பவுனுக்கு ரூ.1,520 குறைந்து ஒரு பவுன் ரூ.92,400 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,800 குறைந்தது. இதே போல வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக சரிந்தது.
நேற்றைய தினம் வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.175க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.


