தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை மாற்றம் காலையில் ரூ.280 குறைந்தது மாலையில் ரூ.720 எகிறியது: ரூ.80480க்கு பவுன் விற்பனை; வரலாற்றில் புதிய உச்சம்
சென்னை: தங்கம் விலை நேற்று காலையில் ரூ.280 குறைந்த நிலையில், மாலையில் ரூ.720 உயர்ந்தது. அதே நேரத்தில் ஒரு பவுன் ரூ.80 ஆயிரத்து 480க்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய உச்சம் கண்டது. வெள்ளி விலையும் போட்டிப் போட்டு உயர்ந்து உயருகிறது. தங்கம் விலை கடந்த மாதத்தில் அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த 25ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்வை தான் சந்தித்தது. கடந்த 29ம் தேதி முதல் தினம், தினம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி தங்கம் விலை மேலும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
அன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,005க்கும், பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.80,040க்கும் விற்றது. இந்த விலை என்பது இதுவரை இல்லாத புதிய உச்சமாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்தால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரம் தொடக்க நாளான நேற்று காலையில் (9.30 மணி நிலவரப்படி) தங்கம் விலை சற்று குறைந்தது.
அதாவது கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.9,970க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு பவுன் ரூ.79,760க்கும் விற்றது. அதே நேரத்தில், வெள்ளி விலையும் குறைந்திருந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.137க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் விற்றது. இந்த விலை குறைவு என்பது 5 மணி நேரம் கூட தாக்குப்பிடிக்கவில்லை. நகை வாங்குவோருக்கு மேலும் அதிர்ச்சியை உண்டாக்கும் வகையில் நேற்று மாலையில் மீண்டும் தங்கம் விலை எகிறியது.
மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,060க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூ.80480க்கு விற்றது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அடைந்தது. இதே போல வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.140க்கும், கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏழை, நடுத்த மக்கள் மற்றும் இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.