ஒரே நாளில் இருமுறை உயர்ந்தது மீண்டும் ரூ.95,000 கடந்த தங்கம்: விண்ணை முட்டும் விலையால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
சென்னை: ஒரே நாளில் காலை, மாலை என இருமுறை என அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை பவுனுக்கு ரூ.2400 அதிகரித்து மீண்டும் ரூ.95ஆயிரத்தை கடந்தது. தீபாவளி பண்டிகைக்கு முன்பு தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்த நிலையில், பண்டிகைக்கு பிறகு திடீரென குறைந்தது. ஆனாலும், படிப்படியாக உயர்வதும் குறைவதுமாக போக்கு காட்டி வருகிறது. கடந்த 10ம்தேதியில் இருந்து மீண்டும் எகிற தொடங்கியது.
நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,600க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,800க்கும் விற்பனையானது. இந்நிலையில், தங்கத்தின் விலை வியாழக்கிழமையான நேற்று காலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.11,800க்கும், பவுனுக்கு ரூ.1,600 உயர் ந்து ரூ.94,400க்கும் விற்பனையானது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்கம் ஒரே நாளில் அதிரடியாக இரண்டு முறை மாற்றம் கண்டு அதிரடி காட்டியது.
அதன்படி நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்தது. அதன்படி, நேற்று மாலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.95,200க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து 11,900க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகைபிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், விண்ணை முட்டும் விலை உயர்வால் விழிபிதுங்கி உள்ளனர்.
