ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்தது: மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தகவல்
சென்னை: ஜெட் வேகத்தில் வேகமாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது சரிவை நோக்கி பயணிக்க தொடங்கியது. கடந்த 15ம்தேதி பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.81,680க்கு விற்பனையான நிலையில், செப்.16ம்தேதி பவுனுக்கு ரூ.560 உயாந்து ரூ.82,240க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் கிராம் ரூ.10ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுவது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, புதன்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.10,270க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.82,160க்கும் விற்பனையானது.
இந்நிலையில், தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. அதாவது, தங்கம் விலை 2வது நாளாக குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.10,220க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.81,760க்கும் விற்பனையாகிறது. இது தங்கம் விலை எப்போது குறையும் என ஆவலுடன் காத்திருந்த நகை பிரியர்களுக்கும், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருந்த குடும்பங்களுக்கும் சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலவரங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டியதால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து சந்தையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இது வரும் வாரத்திலும் தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.