சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1120 குறைந்தது. தொடர்ந்து விலை குறைந்து வருவதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது. அதாவது கடந்த 14ம் தேதி தங்கம் விலை பவுன் ரூ.1,280, 15ம் தேதி ரூ.1,520 என குறைந்தது. 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால் விலையில் எந்தவித மாற்றம் ஏற்படவில்லை.
தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,540க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு பவுன் ரூ.92,320க்கும் விற்பனையானது. இதே போல வெள்ளி விலையும் குறைந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மேலும் அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.11,400க்கும், பவுனுக்கு 1,120 குறைந்து ஒரு பவுன் ரூ.91,200க்கும் விற்பனையானது.
இதன் மூலம் தங்கம் விலை தொடர்ந்து 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.4,000 வரை குறைந்தது.
இதே போல நேற்று வெள்ளி விலையும் சரிவை சந்தித்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.170க்கும், கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தீபாவளிக்கு முன்பு தங்கம் விலை தினம், தினம் அதிரடியாக உயர்ந்து வரலாற்று உச்சத்தை கண்டு வந்தது. இதனால், நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது தங்கம் விலை குறைந்து வருவது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.


