ஜெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை: சென்னையில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
சென்னை: தொடர்ச்சியாக உச்சத்தை தொட்டு வரும் தங்கம் விலையால், சாமானிய மக்கள் நகையை வாங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ரஷ்யா - உக்ரேன் போர், இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் உள்ளிட்ட காரணங்களால், உலகப் பொருளாதார சூழலில் நிச்சயமற்ற தன்மை இருந்தது. இதனால் உலக நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியது. இதனால் கடந்த ஆண்டு தங்கம் விலை அதிகரித்தது. இதையடுத்து அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவர் அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார்.
இதனால் அனைத்து நாடுகளிலும் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. இந்த திடீர் சரிவால் மீண்டும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியது. இதன் காரணமாக மீண்டும் தங்கம் விலை உயர்ந்து, வரலாறு காணாத உச்சம் தொட்டது.நேற்று முன் தினம் தங்கம் விலை முதன் முறையாக ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்தை கடந்த நிலையில், நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது. தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதை விட அதிகமாக உயர்ந்து ரூ.72 ஆயிரத்தை எட்டவுள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு கிராம் தங்கமே ரூ.9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
நேற்று (17.04.2025) கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,920-க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று (18.04.2025) கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,945-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,405-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.120 உயர்ந்து, ரூ.59,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை தொடர்ந்து 3வது நாளாக எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.