தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை மாற்றம்; காலையில சர்ருன்னு குறைந்து மாலையில் சட்டுனு உயர்ந்தது: பவுன் ரூ.90,400க்கு விற்பனை
சென்னை: தங்கம் விலை நேற்று காலையில் அதிரடியாக பவுனுக்கு ரூ.1800 குறைந்து, மாலையில் ரூ.1600 உயர்ந்ததால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். பவுன் ரூ.1,600 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனையானது. தங்கம் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 17ம் தேதி ஒரு பவுன் ரூ.97,600 என்ற இதுவரை இல்லாத வரலாற்று உச்சத்தை எட்டியது. தொடர்ந்து தீபாவளிக்கு பிறகு (கடந்த 20ம் தேதி) தங்கம் விலை குறைந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த 28ம் தேதி தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.3 ஆயிரம் குறைந்து, ஒரு பவுன் ரூ.88,600க்கு விற்றது. தங்கம் விலை மேலும் குறையும் என எதிர்பார்த்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் அதிகரித்து நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது நேற்று முன்தினம் காலை, மாலை என தங்கம் விலை கிராமுக்கு ரூ.250, பவுனுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரித்து ஒரு பவுன் ரூ.90,600க்கு விற்றது.
இந்நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக குறைந்தது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.225 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,100க்கும், பவுனுக்கு ரூ.1,800 குறைந்து, ஒரு பவுன் ரூ.88,800க்கும் விற்றது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.165க்கும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து, பார் வெள்ளி ஒரு கிலோ 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்குள் மாலையில் தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது மாலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்து இருந்தது. அதாவது மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,300க்கும், பவுனுக்கு ரூ.1600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.90400க்கும் விற்கப்பட்டது. காலையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்து, மாலையில் அதே வேகத்தில் அதிகரித்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதே நேரத்தில் மாலையில் வெள்ளி விலையில் மாற்றம் ஏதுவும் ஏற்படாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.165க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
 
  
  
  
   
