சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களில் ஒரே நாளில் இரண்டு முறை மாற்றம் காணப்பட்டது. நேற்று காலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைந்தது. மாலையில் காலை விலையை விட ரூ.480 உயர்ந்தது.
தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதம் முதல் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதேபோல, வெள்ளி விலையும் போட்டிப்போட்டு உயர்ந்து வருகிறது. அதுவும் காலை, மாலை என இரண்டு வேளையும் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த உயர்வு என்பது இந்த மாதமும் தொடருகிறது.
நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் தங்ம் ரூ.10,840க்கும், பவுனுக்கு ரூ.880 குறைந்து ஒரு பவுன் ரூ.86,720க்கும் விற்பனையானது. இதே போல வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.161க்கும் கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இதற்கிடையில் தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் மாலையில் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் காணப்பட்டது.
மாலையில் தங்கம் விலை காலை விலையை விட கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10900க்கும், பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு பவுன் ரூ.87,200க்கும் விற்கப்பட்டது. இதே போல மாலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.162க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. காலையில் குறைந்து, மாலையில் தங்கம் விலை அதிகரித்து வருவது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு குழப்பத்தையும், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.