தங்கம் இரண்டாவது நாளாக ஜெட் வேகம் பவுன் ரூ.85 ஆயிரத்தை தாண்டி புதிய வரலாற்று உச்சம்: மீண்டும் ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்தது; வெள்ளியும் போட்டி போட்டு உயருகிறது
சென்னை: தங்கம் விலை நேற்று 2வது நாளாக ஜெட் வேகத்தில் உயர்ந்து பவுன் ரூ.85 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை கண்டது. வெள்ளி விலையும் போட்டி போட்டு உயர்ந்து வருகிறது. இதனால் தங்கம், வெள்ளி வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதன் பிறகு மாதம் இறுதியில் இருந்து தினம், தினம் விலையேற்றம் என்ற வகையில் வரலாற்று உச்சத்தை கண்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 20ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.82,320க்கு விற்கப்பட்டது.
21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து 22ம் தேதி(நேற்று முன்தினம்) தங்கம் விலை காலை, மாலை என போட்டி போட்டு உயர்ந்தது. அதாவது, காலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.82,880க்கும், மாலையில் தங்கம் விலை மேலும் பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.83,440க்கு விற்கப்பட்டது. ஒரே நாளில் 2 முறை உயர்ந்து தங்கம் விலை அதிரடியாக புதிய உச்சத்தை தொட்டது இது நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மேலும் அதிரடி உயர்வை தான் சந்தித்தது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,500க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.84,000க்கும் விற்க்கப்பட்டது. அதே போல் நேற்று காலையில் வெள்ளி விலையும் உயர்ந்து இருந்ததை பார்க்க முடிந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.149க்கும், கிலோவுக்கு ஆயிரமும் ரூபாய் அதிகரித்து பார்வெள்ளி ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்திற்கும் விற்பனையானது. தொடர்ந்து நேற்று முன்தினம் போலவே இரண்டாவது நாளாக நேற்று மாலையும் தங்கம் விலை கிடு, கிடுவென உயர்ந்தது.
மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,640க்கும், பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.85,120க்கும் விற்கப்பட்து. இந்த விலை உயர்வு என்பது இதற்கு முன்னர் இருந்த அனைத்து உச்சத்தையும் முறியடித்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. நேற்று காலை, மாலை என 2 வேளையும் சேர்த்து தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்தது. நேற்று மாலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.150க்கும், கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. தங்கம் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வேளையில், தற்போது காலை, மாலை என 2 வேளை உயர்ந்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இது குறித்து தங்கம் நகை வியாபாரிகள் கூறுகையில், “அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனால், வங்கியில் வைப்பு வைத்திருப்போரின் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவற்றால், தங்கத்தின் மீது முதலீடு என்பது தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயரவே வாய்ப்பு உள்ளது” என்றனர்.