30 கிலோ தங்கம் மாயமான விவகாரம் சபரிமலை தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்றவரிடம் விசாரணை: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் தொடர்பாக தகடுகளை பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தியிடம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று 6 மணிநேரத்திற்கு மேல் விசாரணை நடத்தியது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 1998ம் ஆண்டு தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன. இதற்காக பெங்களூருவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா 30.300 கிலோ தங்கமும், 1900 கிலோ செம்பும் நன்கொடையாக வழங்கினார்.
கோயிலின் மேற்கூரை, பக்க சுவர்கள், கதவு, நிலை, படிகள் மற்றும் கோயிலின் வெளிப்புறம் உள்ள 2 துவாரபாலகர் சிலைகள் ஆகியவற்றில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன. கடந்த 2019ம் ஆண்டு கோயில் நிலை, கதவு மற்றும் படிகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கத்தகடுகளை பழுது பார்ப்பதற்காக உண்ணிகிருஷ்ணன் போத்தி என்பவரிடம் தேவசம் போர்டு ஒப்படைத்தது.
சபரிமலையில் இருந்து இவற்றை கொண்டு சென்ற போது இதன் எடை 40 கிலோவுக்கு மேல் இருந்தது. ஆனால் சென்னையில் பழுது பார்த்தபின் திரும்பக் கொண்டு வந்த போது அதன் எடை 4 கிலோவுக்கு மேல் குறைந்தது. கடந்த மாதம் துவாரபாலகர் சிலையில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகள் பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இவற்றையும் உண்ணிகிருஷ்ணன் போத்தி தான் சென்னைக்கு கொண்டு சென்றார்.
இந்த துவாரபாலகர் சிலையில் இருந்த தகடுகளில் தங்கம் இல்லை என்று இவற்றை பழுது பார்த்த சென்னை நிறுவனம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சபரிமலை கோயிலில் தங்கத் தகடுகள் பதிப்பதற்காக விஜய் மல்லையா வழங்கிய 30.300 கிலோ தங்கம் அனைத்தும் மாயமாகி இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் தங்கத் தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தியிடம் தேவசம் போர்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி தலைமையில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் இந்த விசாரணை நடைபெற்றது. இதற்கிடையே சபரிமலை கோயில் முழுவதும் 24 கேரட் தங்கத்தால் தான் தகடுகள் பதிக்கும் பணிகள் நடத்தப்பட்டது என்று இந்தப் பணிகளை செய்த நிறுவனத்தினர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.