வாஷிங்டன் : சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்திருப்பது தற்காலிகமானதே என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிதி சேவை நிறுவனமான ஜேபி மோர்கன் அறிவித்துள்ளது. 9 வாரங்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்ததைப் பயன்படுத்தி வர்த்தகர்கள் கைலிருப்பதை விற்று லாபத்தை பார்ப்பதாலும் அமெரிக்க டாலர் மதிப்பு சற்று உயர்ந்திருப்பதும் தங்கம் விலை சற்று குறைந்திருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்கம் விலை குறித்து ஜேபி மோர்கன் ஆய்வாளர்கள் கூறுகையில், "சர்வதேச அளவில் தங்கம் ஒரு அவுன்ஸ் 4100 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சிறிதளவு வீழ்ச்சி கண்டிருந்தாலும், 2026ம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்குள் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சராசரியாக 5,055 டாலரை எட்டக்கூடும். ஒரு அவுன்ஸ் என்பது 31.1 கிராம் ஆகும். சவரன் கணக்கில் பார்த்தால், 3.8 சவரனாகும். இது ரூ.3.72 தொடங்கி ரூ.4 லட்சம் வரை விற்பனையாகிறது. இது அடுத்த ஆண்டு ரூ.4.43 லட்சமாக அதிகரிக்கும். 2026ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு காலாண்டிலும் சுமார் 566 டன்கள் வரை முதலீட்டாளர்கள் மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தை கொள்முதல் செய்வர். எனவே 2028ல் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 8000 டாலரை (ரூ.5,26,500) தொட்டுவிடும். இதன் அடிப்படையில், இந்தியாவில் ஒரு சவரன் தங்கம் 2 லட்ச ரூபாய் வரை உயரலாம்"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
