ரூ.80,000-ஐ எட்டும் ஒரு சவரன்.. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.10,000ஐ நெருங்கியது : கண்ணீர் விடும் வாடிக்கையாளர்கள்!
சென்னை : தங்கம் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. அதுவும், மாதம் இறுதி வாரத்தில் இருந்து தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தையும் பதிவு செய்து வந்தது. அதாவது, கடந்த 29ம் தேதி மாலை ஒரு பவுன் ரூ.76,280 ஆகவும், 30ம் தேதி பவுன் ரூ.76,960 ஆகவும், செப்டம்பர் 1ம் தேதி பவுன் 77,640 ஆகவும், 2ம் தேதி ரூ.77,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,805க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.78,440 ஆகவும் விற்கப்பட்டது. அதேநேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை புதிய உச்சத்தையும் பதிவு செய்தது. நேற்றும் தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்தது.
அதாவது, கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,795க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.78,360க்கும் விற்கப்பட்டது.இந்த நிலையில், ஓணம் பண்டிகையான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.78,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.9,865க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் 3வது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.137க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 37ஆயிரத்துக்கும் விற்பனையானது.