தங்கம் விலை பவுனுக்கு ரூ.96 ஆயிரமாக விற்பனை; காலையில் ரூ.2080ஆக எகிறிய தங்கம் மாலையில் ரூ.1440ஆக இறங்கியது: நகை வாங்குவோர் சற்று நிம்மதி
சென்னை: தங்கம் விலை நேற்றைய நிலவரப்படி பவுனுக்கு ரூ.96ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று காலையில் ரூ.2080ஆக எகிறிய தங்கம் விலை மாலையில் ரூ.1440 இறங்கியது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.5,600 உயர்ந்து வெள்ளிக்கிழமை ஒரு பவுன் ரூ.97,600க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது. வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்தது.
தீபாவளியை பண்டிகையான நேற்று முன்தினம் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,920-க்கும் பவுனுக்கு ரூ.640 குறைந்து ஒரு பவுன் ரூ.95,360-க்கும் விற்பனையானது. தங்கம் விலை குறையுமா என எதிர்பார்த்த இல்லத்தரசிகளுக்கு நேற்று அதிர்ச்சியே காத்திருந்தது. தங்கம் விலை நேற்று காலை ஒரு கிராம் ரூ.260 உயர்ந்துள்ளது. பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.97,440-க்கு விற்பனையாகிறது.
இந்த அதிரடி உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நகை வாங்க திட்டமிட்டவர்கள் பலர் இந்த அதிரடி விலை உயர்வால் நகை கடைகளுக்கு செல்வதை தவிர்த்தனர். இந்்நிலையில், நேற்று மாலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் காலையில் பவுனுக்கு ரூ.2080 உயர்ந்த நிலையில் மாலையில் பவுனுக்கு ரூ.1440 குறைந்து ரூ.96 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.180 குறைந்த நிலையில் ரூ.12000-க்கு விற்பனை செய்யப்பட்டது. காலையில் அதிகரித்து, மாலையில் விலை குறைந்ததால் நகை வாங்க திட்டமிட்டவர்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர்.