சென்னை: தங்கம் விலை நேற்று மேலும் ஜெட் வேகத்தில் அதிகரித்து பவுன் ரூ.87 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,860க்கும், பவுனுக்கு ரூ.720 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.86,880க்கும் விற்றது. இதேபோல வெள்ளி விலையும் நேற்று உயர்ந்தது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 161 ரூபாய்க்கும், கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது.
இதுகுறித்து தங்கம் நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘சர்வதேச பொருளாதார சூழல், ரூபாயின் மதிப்பில் சரிவால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. வணிகத் துறை நிறுவனங்கள் வெள்ளி முதலீடு மற்றும் கொள்முதலில் ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு மின்சார பொருட்களின் வடிவமைப்பு பணிகளில் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. இதோடு உலக நாடுகளும் வெள்ளியை அதிகளவில் முதலீடு செய்து வருவதும் வெள்ளியின் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது” என்றனர்.