Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்வாதிகாரத்திடம் இருந்து நாட்டை காப்பாற்ற மீண்டும் சிறை செல்கிறேன்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உருக்கம்

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக இன்று வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் இன்றுடன் முடிவடைவதால், கெஜ்ரிவால் நாளை திகார் சிறையில் சரணடைய வேண்டும். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘‘ஜூன் 2ம் தேதி (நாளை) கண்டிப்பாக சரணடை வேன் . அதில் எந்த தயக்கமும் எனக்கு கிடையாது. சரணடைந்த பிறகு எவ்வளவு காலம் என்னை சிறையில் அடைத்திருப்பார்கள் என தெரியவில்லை. ஆனால் சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற சிறைக்கு செல்கிறேன் என்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது. எப்போது வருவேன் என்று தெரியாது. இந்த காலக்கட்டத்தில் எனது வயதான பெற்றோர்களையும், எனது குடும்பத்தையும் டெல்லி மக்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிறையில் இந்தமுறை என்னை அதிகம் சித்ரவதைக்கு உள்ளாக்கலாம். ஏனெனில் தேர்தல் பிரசாரங்களில் பாஜவுக்கு எதிராக பல்வேறு உண்மைகளை வெளியில் கொண்டு வந்தேன். அதில் முக்கியமானது பிரதமர் நரேந்திர மோடி ஓய்வு பெறப்போவது குறித்த எனது தகவல் பாஜவின் மூத்த தலைவர்களையே ஆட்டம் காண வைத்து விட்டது. இவை அனைத்தையும் மனதில் வைத்து கொண்டு விசாரணை அமைப்புகள் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் மூலம் பல துன்பங்களை பாஜ எனக்கு தர வாய்ப்பு உள்ளது. முன்னதாக திகார் சிறையில் எனக்கு வழங்கப்பட்ட சலுகைகள் கூட நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக மேலும் ஒரு வார காலம் இடைக்கால ஜாமீனை நீடிக்கக் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு டெல்லி கோர்ட்டில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.