கோத்ரா: சமூக ஊடகத்தில் பரவிய வதந்தியைத் தொடர்ந்து, கோத்ராவில் காவல் சாவடியைச் சூறையாடிய கும்பலைச் சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டனர். குஜராத்தின் கோத்ரா நகரில், மத ரீதியான பதாகை தொடர்பாக சமூக ஊடகத்தில் பிரபலமாக இருக்கும் நபர் ஒருவர் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்தபோது, அவரைக் காவல்துறை தாக்கியதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இந்த வதந்தியைத் தொடர்ந்து, காவல் நிலையம் முன்பு திரண்ட கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. அவர்கள் காவல் நிலையும் உள்ள சோதனை சாவடியை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
நிலைமையைக் கட்டுப்படுத்தக் காவல்துறை தடியடி நடத்தியது. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; மேலும் 88 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நவராத்திரி பண்டிகைக் காலத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கோத்ரா நகரம் ஏற்கெனவே மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட வரலாறு கொண்டது. சமூக ஊடகங்களில் வதந்தியைப் பரப்பியவர்கள் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட மற்றவர்களைக் கண்டறியும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.