Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோதையாரில் உலாவும் காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பகுதியில் ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள், தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1, சிற்றார் 2 ஆகிய அணைகள் உள்ளது. இந்த அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளை சுற்றிலும் அரசு ரப்பர் கழக ரப்பர் தோட்டங்கள் உள்ளது. இவற்றில் பால் வெட்டுதல், அதனை சார்ந்த தொழில்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் கோதையார், குற்றியார், சிற்றார் போன்ற பகுதிகளில் உள்ளது. இவை தவிர கோதையாரில் 2 நீர் மின் நிலையங்கள், மின்வாரிய ஊழியர்கள் குடியிருப்பு, அரசு பள்ளி போன்றவை உள்ளது. மலைகளின் உள் பகுதிகளில் ஏராளமான மலைவாழ் குடியிருப்புகள் உள்ளது. அதோடு சூழியல் சுற்றுலா தலமாகவும் உள்ளது.ஆகவே இங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதனால் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கோதையாறு உள்ளது. இதே போன்று யானைகளின் சொர்க்கப்புரியாக மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இது பல்லுயிரின சரணாலயமாக இருந்தாலும் யானைகள் அதிகமாக உள்ளது.

அரசு ரப்பர் கழகத்தில் உள்ள ரப்பர் தோட்டங்களில் முதிர் ரப்பர் மரங்கள் வெட்டப்பட்டு புதிய ரப்பர் செடிகள் நடவு செய்யும் போது ஊடுபயிர் செய்ய குத்தகைக்கு விடப்படுகிறது. ஊடு பயிராக அன்னாசி, வாழை, மரச்சீனி போன்றவை பயிரிடப்படுகிறது. அடர்ந்த காடுகளில் சுற்றி திரியும் யானைகளுக்கு இங்குள்ள ஊடுபயிர்களை விரும்பி உண்ணுகின்றன.இதற்காக யானைகள் கூட்டம் கூட்டமாகவும், ஒன்றையாவும் அடர்ந்த காடுகளில் இருந்து வெளியேறி இந்தப் பகுதிகளை சுற்றி வருகிறது. இந்த யானைகளால் பால் வெட்டும் தொழிலாளர்கள் பலர் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளை சுற்றி வரும் இந்த யானை கூட்டங்கள் பயிர்களை மட்டுமின்றி வீடுகளையும் சேதப்படுத்துகிறது.

யானை நடமாட்டம் இருக்கும் போது பல நாட்கள் பொதுமக்கள் வீடுகளில் முடங்கும் சூழல் உள்ளது. தற்போது பருவ மழை பெய்து வரும் நிலையில் ரப்பர் பால் வெட்டும் பணிகள் முடங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒற்றை யானை ஒன்று கோதையார் பகுதியில் ரப்பர் தோட்டங்களில் சுற்றி திரிகிறது. இந்த யானை நடமாட்டம் பொதுமக்கள், தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.