கோபி : கோபி அருகே 3 இடங்களில் போலி, காலாவதி 65 உர மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி அதனை வீசிச்சென்றவர்களை தேடி வருகிறார்கள்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூர், வடுகபாளையம் பகுதிகளில் மூட்டைகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதாக கோபி நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் அங்குள்ள உள்ள தாரா கார்டன் பகுதியில் இருந்த 15 மூட்டைகள், ருகே உள்ள ரோஜா நகரில் 25 மூட்டைகள், ஐந்து கருப்பராயான் கோயில் அருகே உள்ள குட்டையில் கிடந்த 25 மூட்டைகளை கைப்பற்றி பிரித்து பார்த்தனர்.
அதில் உரங்கள் நிறம் மாறிய நிலையில் மூட்டைகளில் அடைத்து வீசப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவற்றை சோதனை செய்த போது, அவை காலாவதியான உரங்கள் மற்றும் போலி உரங்கள் என்பதும், ஒரே இடத்தில் வீசினால் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால் 3 இடங்களில் வீசிச்சென்று இருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அந்த மூட்டைகளை கைப்பற்றிய அதிகாரிகள், அந்த உர மூட்டைகளை வீசிச்சென்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 65 மூட்டை உரங்கள் என்பதால் வாகனங்களில் மட்டுமே கொண்டு சென்று இருக்க முடியும் என்பதால் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை வைத்து வாகனத்தையும், நபர்களையும் அடையாளம் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.காலாவதி மற்றும் போலி உர மூட்டைகளை குடியிருப்பு அருகே வீசிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.