மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக் கூடாது. நெல்லித்தோப்பு பகுதியில் ெதாழுகை நடத்தலாம் என்று 3வது நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார். மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும், நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்தவும் தடை விதிக்கக்கோரி ராமலிங்கம், சோலை கண்ணன் ஆகியோரும், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்கவும், மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கவும் கோரி பரமசிவம் என்பவரும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதேபோல் சிக்கந்தர் தர்கா பகுதியில் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி கோரி, சிக்கந்தர் தர்காவின் முதுநிலை மேலாண்மை அறங்காவலர் ஓசிர்கானும், சிக்கந்தர் தர்காவுக்கு வரும் பக்தர்களுக்கு சாலை, விளக்கு, குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்தக்கோரி அப்துல்ஜப்பார் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கக்கோரி சுவஸ்தி லெட்சுமிசேனா பட்டாச்சர்ய மகா சுவாமியும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.மதி ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால், 3வது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இதன்படி 3வது நீதிபதி ஆர்.விஜயகுமார் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு பகுதியில் விலங்குகள் பலியிடும் வழக்கம் குறித்து உரிய சிவில் நீதிமன்றத்தால் முடிவு எடுக்கப்படும் வரை, எந்தவொரு விலங்கு பலியிடுதல், சமைத்தல், எடுத்துச் செல்வது அல்லது பரிமாறுதல் உள்ளிட்டவைக்கு அனுமதிக்க முடியாது. உண்மையில், நெல்லித்தோப்பு பகுதிக்கு செல்லும் பாரம்பரிய படிக்கட்டு பகுதிகளின் முழுமையான உரிமையாளர் கோயில் தேவஸ்தானமே. இஸ்லாமியர்கள் குறிப்பிட்ட பாதையை மட்டுமே பயன்படுத்த உரிமை உள்ளது. இதுபோன்ற சூழலில், நெல்லித்தோப்பு பகுதிக்கு செல்வதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் அவர்கள் குறிப்பிட்ட பாதையைப் பயன்படுத்த முடியாது. இந்த நிபந்தனைக்கு உட்பட்டு, ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகை நாட்களில் மட்டும் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தங்கள் தொழுகையை மேற்ெகாள்ள அனுமதிக்கலாம்.
அப்போது அவர்கள் பாரம்பரிய படிக்கட்டுகளை அசுத்தப்படுத்தவோ அல்லது அதை கெடுக்கவோ கூடாது. சிலர் திருப்பரங்குன்றம் மலையை ‘சிக்கந்தர் மலை’ என்று பெயர் மாற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. வருவாய் பதிவேடுகளிலும், இந்திய அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் பதிவேடுகளிலும் மலைக்குன்றின் பெயர் திருப்பரங்குன்றம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வுத் துறையும் இந்த மலையை ‘திருப்பரங்குன்றம்’ என்று அழைக்கிறது. எங்கும் ‘சிக்கந்தர் மலை’ என்று அழைக்கப்படவில்லை. கலெக்டர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மலையின் உச்சியில் விலங்குகள் பலியிடுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்கவும், மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கவும் கோரி பரமசிவம் மற்றும் சோலைகண்ணன் ஆகியோரது மனுவின் மீது நீதிபதி மதி பிறப்பித்த உத்தரவான திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் என்ற உத்தரவில் உடன்படுகிறேன். நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து அங்கு தொழுகை நடத்தலாம் என்ற நீதிபதி நிஷாபானுவின் உத்தரவில் உடன்படுகிறேன். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.