Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆடு நனைகிறதே என ஓநாய் அழுகிறது தேர்தலுக்கு பின் கம்யூ. கட்சி இருக்கா? அதிமுக இருக்கா? என்று பார்ப்போம்: சண்முகம் பதிலடி

திருவாரூர்: கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கவலைப்படுவது, ஆடு நனைகிறதே என ஓநாய் அழுததாக கூறும் பழமொழியை போன்று உள்ளது. தேர்தலுக்கு பின் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்போம் என சண்முகம் பதிலடி தந்து உள்ளார். பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதை போல, நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கும் தேர்தல் ஆணையத்தையும், ஒன்றிய பாஜ அரசையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. பிழைப்பு தேடி தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் வேலைக்காக சென்றுள்ள நிலையில் சில மாதங்கள் ஊரில் இல்லை என்ற காரணத்தை கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பாஜவுக்கு யாரெல்லாம் வாக்களிக்க மாட்டார்கள் என தெரிய வந்ததோ அவர்கள் வாக்குகள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லு குறித்தும் கடந்தமுறை மோடி வெற்றி பெற்ற முறை குறித்தும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். பீகாரை தொடர்ந்து, தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் இதே நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இன்றைய தினம் (நேற்று) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோன்ற அனைத்து கட்சிகளும் போராடுவதற்கு முன்வர வேண்டும்.

வாக்காளர்கள் இல்லாமல் செய்து ஆட்சியை பிடிப்பதற்காக பாஜ முயன்று வருகிறது. இதற்கு கைப்பாவையாக தேர்தல் ஆணையமும் மாறியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல் நாள் ஒன்று, மறுநாள் ஒன்று என தனது பிரசாரத்தில் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகிறார். தேர்தலுக்கு பின்பு கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா அல்லது அதிமுக இருக்கிறதா என தெரியவரும்.

அவர்களது கூட்டணியில் தொடர்ந்து முரண்பட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன. திமுக கூட்டணியில் அப்படியல்ல. எனவே எடப்பாடி பழனிசாமி, முதலில் அவர் தங்களது கூட்டணியை சரி செய்யட்டும். அதன் பின்பு மற்ற கட்சிகள் மற்றும் கூட்டணியை பற்றி பேசலாம். கம்யூனிஸ்ட் கட்சிகள் கரைந்து வருவதாக தெரிவித்து வருவது, ஆடு நனைகிறதே என ஓநாய் அழுததாக கூறும் பழமொழியை போன்று உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.