அவனியாபுரம்: ஆடு, மாடுகளை தொடர்ந்து, மலை, கடலுக்கு மாநாடு நடத்தப்படுமென சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று மதுரை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: துணை குடியரசு தலைவராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து சிறப்பாக சொல்ல எதுவும் இல்லை. ஆர்எஸ்எஸ் கோட்பாடு என்னவோ அப்படித்தான் பாஜ இயங்கும். ஆர்எஸ்எஸ்சில் பயிற்சி எடுத்தவர்கள் அந்த சித்தாந்தப்படி தான் இயங்குவார்கள். நீட் தேர்வை வேண்டாம் என்று சொல்லப் போகிறார்களா என்ன? தெரியாத வட மாநிலத் தலைவரை விட, இவர் தெரிந்தவராக இருக்கார். இதை தவிர இதில் பேச எதுவும் இல்லை.
அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்தவர்கள் விஜய்யுடன் கூட்டணி சேர்வது தொடர்பாக கேட்கிறீர்கள். கூட்டத்தை வைத்து நான் கட்சியை ஆரம்பிக்கவில்லை. நான் நம்புவது உயர்ந்த கொள்கையைத்தான். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயர் வைக்க வேண்டாம். எங்களுடைய வரலாறு உள்ள பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரை வைத்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் பிரசாரம் மேற்கொள்வது அவர் கட்சியின் முடிவு. அதில் கருத்து சொல்ல முடியாது. ஆடு, மாடு மாநாடுகளைத் தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெற உள்ளது. நாங்கள் மனிதர்களுக்கு மட்டுமான அரசியலாக இல்லாமல் எல்லா உயிர்களுக்குமான அரசியலாக பார்க்கிறோம். இவ்வாறு கூறினார்.
* ‘வேடிக்கை காட்ட வருகிறார் விஜய்’
பரமக்குடியில் விஜய்யின் பிரசார பயணம் குறித்து சீமானிடம் கேட்டபோது, ‘‘ரோடு ஷோ, கூட்டு ஷோ என கை காட்டி செல்வது மக்கள் சந்திப்பு கிடையாது. மக்களிடம் நேரடியாகச் சென்று நிற்பதுதான் உண்மையான மக்கள் சந்திப்பு. ஆனால், விஜய் அவ்வாறு மக்களைச் சந்திக்கவில்லை. இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல. வேடிக்கை காட்ட வரும் சிங்கம். ஒரு நட்சத்திரப் பிரபலம் என்றால் வாக்குகள் மட்டும் கேட்க வருவீர்களா?” என்றார்.